எங்கள் பதிவை mobile இல் காண http://goodmoneynse.mobify.me

கட்டுரைகள்


மனசாட்சி பேசக்கூடாதா?




தமிழ்நாட்டிலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களின் ஓராண்டுச் செலவு (சம்பளம், படிகள், சலுகைகளுக்காக) என்ன தெரியுமா? ரொம்பவும் அதிகம் இல்லை,  12 கோடியே 60 ஆயிரம்தான்.  திருச்சியைச் சேர்ந்த என். மணி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டுப் பெற்றதால் கிடைத்துள்ள விவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. மாத ஊதியம் -  8,000, ஈட்டுப்படி-  7,000, தொகுதிப்படி- 5,000, தொகுப்புப் படி- 2,500, தொலைபேசிப்படி-  5,000, அஞ்சல் செலவுப்படி-  2,500, வாகனப்படி-  20,000. ஆக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதத்துக்கு மொத்தம்  50,000.  இத்துடன், எம்.எல்.ஏ. விடுதியில் சலுகைக் கட்டணமாக நாளொன்றுக்கு  2.50 அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு சலுகைக் கட்டணத்தில் மாதம் ஒன்றுக்கு  250 மட்டுமே. உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருந்துகள் வாங்கியதாக ரசீது கொடுத்தால், அந்தத் தொகை எம்.எல்.ஏ.க்களுக்கு திரும்பக் கிடைக்கும்.  நாளொன்றுக்கு படி  500. முக்கிய அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவி, பேருந்துகளில் உதவியாளர் ஒருவருடன் இலவசப் பயணம், மேலும் பயணப்படியாக ஓராண்டுக்கு  20,000, இலவச எழுது பொருள்கள் இன்னும் என்னென்னவோ...  தமிழகத்திலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் சேர்த்து சராசரியாக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளாக ஒரு மாதத்துக்கு  ஒரு கோடியே 50 ஆயிரம் செலவிடப்படுகிறது. ஆண்டுக்கு  12 கோடியே 60 ஆயிரம்.  எப்படி வளர்ந்தது தெரியுமா? கடந்த 1964 மார்ச் 31-ம் தேதி வரை எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வெறும் |150 மட்டும்தான். வேறெந்தப் படிகளும் கிடையாது. அந்த ஆண்டு சம்பளத்தில்  100 உயர்த்தப்பட்டு, 1971 அக்டோபர் 1-ம் தேதி முதல் ஈட்டுப்படியாக |100 சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகுதான் இந்தப் படிப்படியான இமாலய வளர்ச்சி. இப்போதைய "ஈட்டுப்படி'  7,000.   1978 முதல் தொடங்கப்பட்ட "தொலைபேசிப்படி' | 150, இப்போது | 5,000 ஆகியிருக்கிறது. 1991 முதல் தொடங்கப்பட்ட "தொகுதிப்படி'  250, இப்போது  5,000 ஆகியிருக்கிறது. 1993-ல் தொடங்கப்பட்ட "அஞ்சல்படி'  250, இப்போது  2,500 ஆகியிருக்கிறது. 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "தொகுப்புப் படி'  2,000, இப்போது | 2,500 ஆகியிருக்கிறது. 2007-ல் தொடங்கப்பட்ட "வாகனப்படி'  5,000, இப்போது  20,000 ஆகியிருக்கிறது.   மொத்தத்தில் 1964, மார்ச் 31-ம் தேதி வரை மாதம் |150 வாங்கிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள், 45 ஆண்டுகளில் "எல்லா வளர்ச்சியும்' பெற்று இப்போது தலா  50,000 பெறுகிறார்கள்.    கடந்த 8 ஆண்டுகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு "நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை' என்று பதில் வந்திருக்கிறது. நிதியேதும் நிலுவையில் இருந்தால், மாவட்ட ஆட்சியர்களே நேரடியாகத் தகவல் சொல்லி, கடிதம் கேட்டுப் பெற்றுக் கொண்டு எடுத்துக் கொள்வார்களாக இருக்கும்.   ஆனால், இந்தத் திருநாட்டில்தான் "எக்ஸிகியூட்டிவ்' நிலையில் பணியில் இருப்பவர்களும்கூட  10,000 ஊதியம் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். பல்வேறு தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இளம் ஆசிரியர்களுக்கு ஊதியம் இன்னமும் ஆறாயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.   உலகப் போட்டியில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்திக்கு மாதம்தோறும்  5,000தான் ஊதியம். "தாற்காலிகப் பயிற்சியாளர்' என்பது அவரது பதவியின் பெயர். அவரால் உருவாக்கப்பட்டுள்ள வீரர்களின் மதிப்பு?  உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளருக்கு மாதம்தோறும் | 6,000.ஓர் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மற்றொரு வாகனம் மோதி இறந்த திருச்சி செந்தில்குமாருக்கு அரசு உதவி எதுவுமில்லை!  இன்னும்கூர்ந்து கவனித்தால் இந்தப் பட்டியல் நீளும். ஆனால், அதேநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள், சென்னையில் வீட்டுமனை... இத்யாதி இத்யாதிகளுடன் இன்னும் பல மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கும்.இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தான். தொகுதி மக்களை அந்தப் பேரவையில் பிரதிபலிக்கும் பிரதிநிதிகள்தான். இங்கே குறிப்பிட்ட சில பிரச்னைகளையும்கூட அவர்கள் பேரவையில் பிரதிபலித்ததாகத் தெரியவில்லை.  சொந்த வீடில்லாத, எந்தவித சொத்தோ, வருமானமோ இல்லாத மக்கள் பிரதிநிதிகளுக்கு நாம் எவ்வளவு கொடுத்தாலும் தகும். ஆனால், அவர்கள் தங்கள் வேட்பாளர் மனுவிலேயே பதிவு செய்திருப்பதுபோல லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்கும் உறுப்பினர்களுக்கு, மக்கள் வரிப்பணத்திலிருந்து ஊதியம் கொடுப்பானேன். சேவை மனப்பான்மையுடன் மக்கள் பணியில் அவர்கள் ஈடுபடட்டுமே... இப்படியெல்லாம் நமக்குக் கேட்கத் தோன்றுவதுபோல, அவர்களது மனசாட்சியும் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்...

நன்றி 
தினமணி 


ஊர் கூடித் தமிழ்த் தேர்!

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கும் இருந்து தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி,​​ கோவையில் இன்று முதல் தமிழ்ச் செம்மொழி மாநாடு காண இருக்கிறோம்.உலகத் தமிழ் மாநாடு கூட்டப்படுகிறது என்கிற அறிவிப்பு வந்தவுடன் 'உலகளாவிய உவகை' என்று தலையங்கம் தீட்டி நமது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தோம்.​ அறிவிப்பே உலகளாவிய உவகையைத் தருமானால்,​​ மாநாடு எத்தகைய இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை விவரிக்க வேண்டுமா,​​ என்ன?ஈழத் தமிழர் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு மாநாடு தேவைதானா என்றும்,​​ அரசியல் ரீதியாகத் தங்களை பலப்படுத்திக் கொள்ள ஆளும் கட்சியால் கூட்டப்படும் மாநாடுதானே இது என்றும் கேள்விகளை எழுப்பி எதிர்மறைச் சிந்தனைகள் உருவாக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.வீட்டில் ஒரு திருஷ்டி விழுந்துவிட்டது என்பதற்காக,​​ குழந்தை பிறந்தால் பெயரிடாமலா இருந்து விடுகிறோம்?​ இப்படி ஒரு மாநாடு கூட்டித் தமிழர்கள் ஓரணியில் நிற்பதன் மூலம்தானே உலகுக்குத் தமிழர்தம் ஒற்றுமை உணர்வையும்,​​ பலத்தையும் எடுத்துரைக்க முடியும்!கடந்த 20 ஆண்டுகளாக,​​ குறிப்பாக,​​ பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் போன்ற கொள்கைகள் முன்னுரிமை பெற்றது முதல்,​​ தமிழினுடைய முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.​ எல்லா தளங்களிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது,​​ இல்லையென்றால்,​​ பின்னுக்குத் தள்ளப்படுகிறது.படித்தாலும்,​​ ஏன்,​​ பேசினாலும்கூட மரியாதை இல்லை என்கிற வசை தமிழுக்கு எய்திடலாமோ?​ நடைமுறையில் அதுதானே உண்மை நிலை.​ தமிழர்கள் ஒருவருக்கொருவர் தமிழில் அளவளாவுவதுகூட அரிதாகி வருகிறதே.​ வீடுகளில் பெற்றோர் தங்கள் செல்வங்கள் ஆங்கிலத்தில் மழலைமொழி பேசுவதைக் கேட்டு குதூகலிக்க விரும்புகிறார்களே தவிர அவர்களுக்கு ஆத்திசூடியும்,​​ கொன்றைவேந்தனும்,​​ திருக்குறளும்,​​ நாலடியாரும் சொல்லிக் கொடுத்து மகிழ்ந்த காலம் மலையேறிவிட்டதே...தமிழனுக்கு அடிக்கடி தமிழின் பெருமையை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.​ அதுமட்டுமல்ல.​ பன்னாட்டு அறிஞர்கள் தங்களது ஆய்வுகளைப் பதிவு செய்யக் களம் ஒதுக்கித் தரவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.​ உலகளாவிய அளவில் இதுபோலத் தமிழ் மாநாடு கூட்டப்பட்டால்,​​ சாமானியனுக்குத் தமிழின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த மாதிரியும் இருக்கும்.​ தொடர்ந்து ஆய்வுகள் நடத்த வழிகோலுவதால்,​​ மொழியின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியதாகவும் இருக்கும்.இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வேளையில்,​​ அங்கிங்கெனாதபடி எங்கும் தமிழ்ச் சிந்தனை மட்டுமே பரவிக் கிடக்கும் சூழலில்,​​ தமிழ்ச் சகோதரர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.நமக்குள்ளே,​​ உற்றார் உறவினரோடு,​​ நண்பர்களோடு பேசும்போது இயன்றவரை தமிழில் மட்டுமே பேசுவது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்களேன்.​ நம் வீடுகளில் குழந்தைகள் 'டாடி,​​ மம்மி' என்று பெற்றோரை அழைப்பதற்கு முற்றுப்புள்ளி வையுங்களேன்.அரசியல் கலப்பு என்பது இன்றைய இந்தியச் சூழலில் தவிர்க்க முடியாதது.​ ஆனால்,​​ என்ன அதிசயம்?...​ செம்மொழி மாநாட்டுக்காக விழாக் கோலம் பூண்டிருக்கும் கோவை மாநகரில் பார்வைபடும் இடம் எல்லாம் பட்டொளி வீசிப் பறப்பது மாநாட்டின் இலச்சினை தாங்கிய வண்ணக் கொடிகளே தவிர,​​ பெயருக்குக் கூட ஒரு கட்சிக் கொடி கிடையாது.​ ​குறைந்தபட்சம் எங்காவது முதல்வரின் படமோ,​​ துணை முதல்வரின் படமோ ​ காணப்படுகிறதா என்றால்,​​ ஊஹும்.​ ஆளும் கட்சித் தொண்டர்கள் கரை வேட்டியில் வந்து குவிந்துவிடுவர் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம்.ஆய்வரங்க நிகழ்ச்சியில்,​​ அமைச்சர் பெருமக்களும்,​​ ஆளும் கட்சிப் பிரமுகர்களும் ​ முன்னுரிமை பெற்றிருப்பார்கள் என்று நினைத்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி.எள்ளளவும் அரசியல் கலவாத,​​ தரத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகள் மட்டுமே இடம்பெறுகின்றன.​ சமயம் புறக்கணிக்கப்படும் என்று பயந்தவர்கள் இப்போது அரசியல் முற்றிலுமாக ஆய்வரங்கங்களில் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.நாங்கள் முறையாக அழைக்கப்படவில்லை என்று சிலருக்கு மனக்குமுறல்.​ எங்களுக்கு போதிய வசதி செய்யப்படவில்லை என்று இன்னும் சிலரின் முணுமுணுப்புகள்.​ எனக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை என்று மேலும் சிலருக்கு ஆதங்கம்.​ தமிழின் பெயரால் நடத்தப்படும் ஒரு கோலாகலத் திருவிழாவில் நமது பங்களிப்பு என்ன என்று யோசித்துச் செயல்பட வேண்டியவர்கள்,​​ மரியாதையை எதிர்பார்த்துக் காத்திருப்பது அவர்களது தமிழ்ப் பற்றை சந்தேகிக்க வைக்கிறது.இத்தனை பண விரயத்தில் எதற்காக இப்படி ஒரு செம்மொழி மாநாடு என்று கேட்பவர்கள்,​​ தமிழகத்தின் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்கிறதே அதற்காக எத்தனை கோடிகள் செலவானாலும்தான் என்ன என்று ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்.கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கூட்டப்படும் இந்த வேளையில்,​​ தமிழின் சிறப்பையும்,​​ தமிழர் தம் மேன்மையையும் நமக்கு நாமே மீண்டும் உயர்த்திக் கொள்ள நல்லதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.​ பட்டி தொட்டியெல்லாம்,​​ தமிழ்,​​ தமிழ் மாநாடு என்கிற முழக்கத்தால்,​​ உறங்கிக் கிடக்கும் தமிழ் உணர்வு தட்டி எழுப்பப்படும் என்று நம்பலாம்.மனமாச்சரியங்களைக் களைந்து,​​ குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் தமிழ் உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடிக் குதூகலிக்க வேண்டிய வேளை இது.​ குறுகிய அரசியல் கண்ணோட்டத்தினால்,​​ தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் இந்த கோலாகல விழாவைப் புறக்கணிப்பதன் மூலம் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது,​​ சீப்பை ஒளித்து வைத்துத் திருமணத்தை நிறுத்தும் முயற்சியாகத்தான் முடியும்!இதற்கு முன்னால் நடந்த மூன்று உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களின் மனசாட்சி சொல்லும் இதுபோல அரசியல் கலவாத மாநாடு நடந்ததில்லை என்று.​ அதைச் சாதித்துக் காட்டிய முதல்வரின் சாதனைக்குத் தலைவணங்குகிறோம்!'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்றும்,​​ 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' என்றும் முழங்கிய மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் விதத்தில் கூட்டப்படும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்!

 நன்றி- தினமணி 
visit: http://www.dinamani.com.





குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா!


விட்டில் பூச்சிகள் பொட்டுப் பொட்டென்று விழுந்து சாவதைப்போல், மனிதப் பூச்சிகள் பொத்துப் பொத்தென்று விழுந்து மடிவதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? அதற்கு என்ன காரணம் என்று அறியப் போனவனும் செத்து மடிந்தான். சில மணி நேரத்துக்குள் அந்த ஊரே பிணக்காடாகிவிட்டது. யாரையும் அடக்கம் செய்வதற்கு யாரும் இல்லை. குடும்பங்குடும்பமாக அழிவு நேர்ந்த காரணத்தால், துக்கம் கொண்டாடக்கூட யாரும் எஞ்சி இருக்கவில்லை. பிணங்களை மலைபோல் அடுக்கி, அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் ஒரே "மூச்சில்' கொளுத்திவிட்டார். மூத்தோர், இளையோர், சிறார் என்னும் வேறுபாடு சாவுக்கு இல்லைதான்; வயிற்றிலிருக்கும் பிள்ளையைக் கூடத் தாயை அலற அலற வைத்துப் பிதுக்கிக் கொண்டு போய்விடும் கொடியவன்தான் கூற்றுவன். ஆனால், கூற்றுவன்கூட இப்படிக் கொத்துக் கொத்தாகக் கூட்டம் கூட்டமாக அழிப்பதில்லை. ஓரிருவர் அல்லர்; இருபத்திஐயாயிரம் பேர் சாகடிக்கப்பட்டவர்கள். கண் இழந்தவர்கள்; நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஊனமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து எழுபத்திநான்காயிரம்! அது நடந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் குழந்தைகள் குறைபாடோடுதான் பிறக்கின்றனர்! போபாலில் எந்தவிதப் பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் கட்டப்பட்டு, நம்முடைய அரசால் அனுமதிக்கப்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சுவாயுதான் ஊரே பிணக்காடாக மாறக் காரணம்! அந்த நிறுவனத்தின் முதலாளி ஆன்டர்சன் என்னும் அமெரிக்கன்! இந்தக் கயவன் தன்னுடைய நாட்டை விட்டு விட்டு, தொழில் தொடங்க இந்தியாவுக்கு வந்த காரணம்,  இங்கேதான் மனித உயிர்களுக்கு விலை இல்லை என்பதால்தான். பிழைகள் நேராதவாறும், ஒருவேளை நேர்ந்தால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன என்பது குறித்தும் இங்கேதான் எந்தக் கேள்வி கேட்பாடுகளும் இல்லை.ஆட்சியாளர்கள் மேற்சட்டை, உள்சட்டை, காற்சட்டை என்று எல்லாச் சட்டைகளிலும் பெரிய பெரிய பையாகத் தைத்து வைத்திருப்பார்கள்; அவற்றை நிரப்பினால் போதும் என்பது ஒன்றுதான் இங்கு எழுதப்படாத அரசியல் சட்டம் என்பதை அறிந்துதான் இந்தியாவுக்கு வந்தான் ஆன்டர்சன். இங்கே தொழிலாளிகளுக்குக் கூலியும் குறைவு என்பது அவனுக்கு ஏற்பட்ட இன்னொரு கவர்ச்சி. அமெரிக்காவில் பாதுகாப்புத் தொடர்பான கொள்கைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதால், ஏனோதானோவென்று கட்டப்படுகிற, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலான தொழிற்சாலைகளெல்லாம் மூன்றாம் உலக நாடுகளுக்குக் குறிப்பாக இந்தியாவுக்குத் தள்ளிவிடப்படுகின்றன. இளிச்சவாய் நாடு இந்தியாதானே! இத்தனை உயிர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அமெரிக்க முதலாளி கொடுத்த இழப்பீடு 470 மில்லியன் டாலர்; ஒவ்வொரு தலைக்கும் 200 டாலர்; இந்தியனின் உயிருக்கும் ஊனத்துக்கும் விலை பத்தாயிரம் ரூபாய்; காங்கேயம் மாட்டின் விலையும், இந்தியனின் விலையும் ஒன்றுதான்! இந்த வழக்கு சாதாரண குற்றவியல் நீதிமன்றத்தில் 26 ஆண்டுகள் நடந்திருக்கிறது. இதற்குள் பல அரசுகள் மாறிவிட்டன; பல மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள்; வழக்கை விசாரித்த நீதிபதிகளில் பலர் செத்தே போய்விட்டார்கள். கடைசியில் நீதியும் செத்துப் போய்விட்டது! முதலில் இந்த வழக்கு 304(2) என்னும் குற்றப்பிரிவின் கீழ்தான் நடந்தது. அந்தச் சட்டப்படி குற்றவாளிகளை 10 ஆண்டுகள் தண்டிக்கலாம். அகமதி என்னும் உச்ச நீதிமன்ற நீதிபதி குறுக்கிட்டு விசாரித்து, அதை 2 ஆண்டுகள் மட்டுமே தண்டிக்கக்கூடிய 304 ஏ என்னும் எளிய பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். கேவலம் மோட்டார் ஓட்டி யாரோ ஒருவரின் மீது ஏற்றி விடுகிற பொறுப்பின்மையும், 25,000 பேர் சாவதற்கும், 5 லட்சம் பேர் ஊனமுறுவதற்கும் காரணமான பொறுப்பின்மையும் ஒன்றுதான் என்று அரசமரத்தடியில் கட்டைப் பஞ்சாயத்துச் செய்கிறவன் கூடத் தீர்ப்புச் சொல்ல மாட்டானே! இதைச் சொல்வதற்கு ஓர் உச்ச நீதிமன்றம்! அதைவிடக் கொடுமை அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி அகமதி இதைச் சாதாரணப் பிரிவுக்கு மாற்று என்று உத்தரவிட்டது சரிதான் என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தாங்கிப் பிடிப்பது! ""குற்றம் செய்யும் நோக்கம் தொழிற்சாலை அதிபர்களுக்குக் கிடையாது. ஆகவே அந்தச் செயல் காரணமாக ஒருவர் இறந்தாலும் ஒன்றுதான்; ஆயிரக்கணக்கில் இறந்தாலும் ஒன்றுதான்'' என்று பதற்றமே இல்லாமல் எப்படி கே.ஜி. பாலகிருஷ்ணனால் இதை நியாயப்படுத்த முடிகிறது? இதுதான் சட்டம் என்றால் சட்டத்தை எவன் மதிப்பான்? இந்தத் தீர்ப்பை நீதிப் பேரழிவு என்றும் நீதிப் பயங்கரவாதம் என்றும் சொல்வது நியாயம்தானே! இப்படி ஓர் இழிந்த தீர்ப்பைக் கீழ்நீதிமன்றம் வழங்குவதற்கேற்ப அதற்குச் சாலை அமைத்துக் கொடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அகமதி மக்களின் வயிற்றெரிச்சலில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்! இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் மகேந்திரா உள்பட ஏழு பேருக்கு வெறும் இரண்டாண்டு சிறைத்தண்டனையை வழங்கிய கீழ்நீதிமன்ற நீதிபதிக்கு அவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்கு மனமில்லை! அவசரம் அவசரமாகப் பிணையில் விடுவித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இந்தக் கொடிய குற்றவாளிகளைத் தண்டித்த பிறகும் ஒருநாள் ஒருபொழுதுகூட அவர்கள் சிறையில் இருக்கவில்லை. அடுத்த நீதிமன்றத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். இந்த 7 பேரும் அந்த 2 ஆண்டுத் தண்டனையையும் அனுபவிக்கப் போவதில்லை. முன்பெல்லாம் சந்தேகக் கேஸ் என்று ஒன்று போடுவார்கள். வீதியில் சும்மா போகிறவனை ஒரு கடையின் பூட்டை இழுத்து ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஐயப்பட்டுப் பிடித்ததாகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவனை உள்ளே வைத்து விடுவார்கள். சிறைச்சாலைகள் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கட்டப்பட்டவைதானே! அமெரிக்க ஆன்டர்சனுக்காகவா கட்டப்பட்டது?  நச்சுவாயுக் கசிவுக்கு ஆன்டர்சன் முதலில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய வைத்து மாநில அரசுக்குச் சொந்தமான தனி விமானத்தை அளித்து, தில்லிக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தவர் அன்றைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங். தன்னுடைய சொந்த ஊர் சுடுகாடாகிவிட்டது; சாகடித்தவனைக் காப்பாற்றுவதில் அவ்வளவு அவசரம்! அர்ஜுன் சிங்கை மகனாகப் பெற்றதைவிட, அவருடைய தாய் மலடியாகவே இருந்திருக்கலாம்! அமெரிக்க நெருக்கடி இல்லாமல், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் தூண்டுதல் இல்லாமல், ஒரு கொடிய குற்றவாளியை மாநில அரசே முன்னின்று விடுவித்துப் பாதுகாப்பாகத் தனி விமானத்தில் அனுப்பி வைப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? ஒரு தனி மனிதன், மத்திய அரசின் துணை இல்லாமல் தில்லி விமான நிலையத்தை விட்டு ஒரு தனி விமானத்தில் அமெரிக்கா சென்றுவிட முடியுமா? முடியும் என்றால், நமக்கு ஓர் அரசுதான் எதற்கு? விமான நிலையத்தில் பாதுகாப்புக் கெடுபிடிகள் எதற்கு? பேருந்து நிலையங்கள்போல் ஆக்கிவிட வேண்டியதுதானே! ராஜீவ் காந்தியின் யோக்கியதையே இதுதான் என்றால் அவருடைய மனைவி என்ற பேரில் இந்தியாவில் அதிகாரம் செலுத்த முடியுமா? இதுதான் சோனியாவின் அச்சம்! ஆகவே, எல்லாவற்றையும் மூடி மறைக்கும் வேலைகள் மும்முரமாகி இருக்கின்றன! மத்திய புலனாய்வுத் துறை செயல்பட விடாமல் வெளிவிவகாரத்துறை குறுக்கிட்டது என்று புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் லால் வெளிப்படையாகச் சொன்னபிறகும், முதல்வர் அர்ஜுன் சிங் உத்தரவின் பேரில் தனி விமானத்தில் குற்றவாளியை போபாலை விட்டு அவசரமாகக் கடத்தியதாக அந்த விமானி சொன்ன பிறகும் தானே சாக்குக்குள் இருந்த பூனைக்குட்டி வெளிவந்திருக்கிறது! நடந்த உண்மையை வெற்றிகரமாக 28 ஆண்டுகள் மக்களிடமிருந்து மறைத்து வைத்திருந்த காங்கிரஸ் மத்திய அரசு, இப்போது அதை ஒத்துக்கொண்டு நியாயப்படுத்த முயல்கிறது. மத்திய அரசின் இசைவில்லாமல் தில்லியிலிருந்து தனி விமானத்தில் எப்படி அமெரிக்காவுக்கு ஒரு குற்றவாளி தப்பிச் செல்ல முடிந்தது என்ற கேள்விக்கு விடை சொல்வதைத் தவிர்த்துக் கொண்ட பிரணாப் முகர்ஜி, ஆன்டர்சனைத் தனி விமானத்தில் முதல்வர் அர்ஜுன் சிங் போபாலுக்கு வெளியே கொண்டு போயிருக்காவிட்டால், அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் என்று கூறியிருக்கிறார். அதனுடைய பொருள் என்ன? ஆன்டர்சனை போபால் சிறையில் அடைத்திருந்தால், பிரெஞ்சுப் புரட்சியின்போது மக்கள் கொதித்தெழுந்து பாஸ்டில் சிறையை உடைத்துத் தரைமட்டமாக்கியதுபோல, மக்கள் போபால் சிறையை உடைத்துத் தரைமட்டமாக்கி, ஆன்டர்சனை இழுத்து வந்து உயிரோடு புதைத்திருப்பார்கள் என்பதுதானே! சட்டம்-ஒழுங்கு என்பது தண்டிக்க வேண்டிய ஒரு குற்றவாளியைப் பாதுகாத்துத் தப்ப  வைக்கும்போது குலையுமா? அல்லது சட்டம் சண்டித்தனம் செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒரு குற்றவாளிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும்போது குலையுமா? யோசித்துப் பேச வேண்டாமா மூத்த அரசியல்வாதி! ஒரு கொடிய குற்றத்தை நியாயப்படுத்திவிட்டால், பிரணாப்பை பிரதமராக்கி விடுவாரா சோனியா காந்தி? ஆன்டர்சன் மீதுள்ள வழக்குத் திறந்தே இருக்கிறதாம். சொல்லுகிறார் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி. பிடித்த குற்றவாளியைக் காப்பாற்றிப் பூச்செண்டு கொடுத்துத் தனி விமானத்தில் அனுப்பி விட்டு, வழக்கு உயிரோடுதான் இருக்கிறது என்று சொல்ல வெட்கமாக இருக்காதா, வீரப்ப மொய்லிக்கு? போபால் நச்சுக்கசிவு வழக்கில்தான் என்றில்லை; பொதுவாகக் கொடுங் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் "மனப் பிறழ்ச்சி' மன்மோகன் அரசிடம் காணப்படுகிறது. பாகிஸ்தானின் துணையோடு நாடாளுமன்றத்தின்மீது குண்டு வீசினான் அப்சல்; அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம். அப்சலின் கருணை மனுக் கோப்பு தில்லி முதலமைச்சரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பிறகு, உள்துறை அமைச்சகம் அதன்மீது முடிவெடுக்கும். அந்தக் கருணை மனுக் கோப்பைக் கிடப்பில் போடுமாறு ஏற்கெனவே உள்துறை அமைச்சராக இருந்த பாட்டீல், தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதை அண்மையில் ஷீலா தீட்சித்தே மிகவும் வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு பூனைக்குட்டியாகச் சாக்குக்குள் இருந்து வெளிவருகிறது. ஏன் அப்சலின் கருணை மனுக் கோப்பைக் கிடப்பில் போட வேண்டும்? ஷீலா தீட்சித் காலத்தாழ்வின்றி அதை அனுப்பிவிட்டால், மத்திய அரசு உடனடியாக அதன்மீது முடிவெடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாகும். அப்சலைத் தூக்கிலே போடுவதை உறுதிப்படுத்தினால், ஒருவேளை இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க மாட்டார்களோ என்னும் அச்சம். ஒரு லட்சம் கோடி கொள்ளையடித்த ஆ. ராசாவிடம் அமைச்சர் பதவியைப் பிடுங்கிவிட்டால், தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களிக்க மாட்டார்களோ என்னும் அச்சம்! அப்படிக் கருணாநிதி வேறு பயமுறுத்தி வைத்திருக்கிறார்.  ஓர் இஸ்லாமியன் வைக்கிற குண்டில் பல்லாயிரம் இஸ்லாமியர்களும் இறந்து போகிறார்கள்; ஒரு தாழ்த்தப்பட்டவன் அடிக்கிற கொள்ளையால், பல கோடித் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்கான நிதி ஆதாரம் தடுக்கப்பட்டு விடுகிறது என்று மக்களுக்குப் புரியும்படியாக நெஞ்சுரத்தோடு எடுத்துச் சொல்லிவிட்டு நீதியின்படி நடக்க வேண்டியதுதானே! அது முதுகெலும்புள்ள அரசால்தான் முடியும்! மன்மோகன் அரசால் முடியாது! இன்னொரு கொடுமை அண்மையில் சிங்கள மந்திரிசபையில் அங்கம் வகிக்கிற டக்ளஸ் தேவானந்தா, கசாப்புக் கடைக்காரன் ராஜபட்சவோடு தில்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கையைப் பிடித்துக் குலுக்கியிருப்பது! அச்சுறுத்திப் பணம் பறித்தது; ஆளைக் கடத்தியது; ஒருவரைக் கொலை செய்தது என்று மூன்று கொடிய வழக்குகளில் சென்னை காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டு, தேடுவோர் பட்டியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தா, மன்மோகன் சிங் கையைப் பற்றியபோது, அப்படியே தில்லி காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டாமா? கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒரு பிரபாகரனைப் பிடிக்க முடியவில்லை என்பதால், கருணாநிதியின் ஆசீர்வாதத்தோடு, சிங்கள அரசுக்கு உதவி, ஈழத்தையே சுடுகாடாக்கியதே காங்கிரஸ் மத்திய அரசு! இன்னொரு கொலைக் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா மன்மோகன் சிங்கின் கைகளில் வந்து சிக்கிய பிறகும் கோட்டைவிட்டது ஏன்? போபாலையே மயானமாக்கிய ஆன்டர்சன், வெடிகுண்டுப் பயங்கரவாதி அப்சல், கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தா என்று எல்லோரும் மன்மோகன் சிங்கை வாழ்த்திக் கொண்டே வாழ்கிறார்கள்! குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா!

பழ. கருப்பையா
 நன்றி- தினமணி